தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை தலைவிரித்தாடுகிறது. இதுகுறித்து விசாரிக்க “தி வாய்ஸ் ஆஃப் உமன்” என்கிற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் நடிகை சமந்தாவும் இடம்பெற்று இருக்கிறார்
இந்நிலையில், தற்போது மலையாள திரையுலகில் ஹேமா குழு அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ள சூழலில், தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகளையும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று கோரி தி வாய்ஸ் ஆஃப் உமன் விசாரணை குழுவின் அறிக்கையை தெலுங்கானா அரசு வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஹேமா குழு வெளியிட்ட அறிக்கையில், முன்னணி நடிகர்களே நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவங்கள் அனைத்தும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை அடுத்து ஏராளமான நடிகைகள் மலையாள திரையுலகில் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசி வருகின்றனர்.
இதனிடையே தமிழ் திரையுலகிலும் ஹேமா கமிட்டி போல் ஒரு குழு அமைத்து இங்குள்ள நடிகைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறி உள்ளார். இது தொடர்பாக இன்னும் சில தினங்களில் இந்த குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்திய தி வாய்ஸ் ஆஃப் உமன் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசை நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார்.
தெலுங்கு திரையுலகில் இருந்து இதுதொடர்பாக குரல் கொடுத்த முதல் நடிகை சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமையும் எனவும் நடிகை சமந்தா கூறி இருக்கிறார்.
இதன் மூலம் விரைவில் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த அறிக்கையும் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்த குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை தான் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.