கடந்த 2021-ம் ஆண்டு சிறப்பு டிஜிபியாக பணி புரிந்துவந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் புகார் தெரிவித்தார்.
மேலும், ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்கக் கூடாது என்று செங்கல்பட்டில் எஸ்.பியாக இருந்த கண்ணன் தன்னைத் தடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் அளித்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
அதையடுத்து, புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு 138 முறை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அரசு தரப்பு சாட்சிகளான 73 பேரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்தி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவர் மீதும் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இருவரும் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி தீர்ப்பை வாசித்தார்.
அதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேஷ்தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.