மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 14ஆம் தேதி புஷ்பா அபிஷேகத்துடன் தொடங்கிய பிறம்மோற்சவ தீமிதி திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை தீமிதி மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.
கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் எதிரில் அம்மன் எழுந்தருளி காட்சியளிக்க குளக்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வர விரதமர்ந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும் காவடி ஏந்தியும் ஊர்வலமாக வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன், தேரில் எழுந்தருளி காட்சி அளிக்க தேர் வீதி உலாவும் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர். விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டார்.