தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் கோரிக்கை தீர்மானமாக 28ம் தேதி அகில இந்திய கோரிக்கை நாளாக அறிவித்து நாடு தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் பெரியசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து விட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி எம்.ஆர்.பி செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்.களை நிரப்பிட தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்றால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியாக சென்று கோரிக்கைகள் குறித்து முறையிடுவோம் என தெரிவித்தார்.