மனிதனை அடிமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுவதோடு, சமூக சீர்கேட்டை விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
]’இணையத்தின் வழியாக பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சமீபகாலமாக பெருகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழ்நிலையில் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், பேராசையின் காரணமாகவும் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமைகளாக மாறினர்.
தற்போது சூதாட்ட செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலர் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடுங்கள் உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி சில சினிமா நடிகர்கள் இத்தகைய சூதாட்ட விளம்பரங்களில் சமூக அக்கறையற்று நடிப்பது மோசமான உதாரணங்களாகும்.
கடந்த அதிமுக ஆட்சியில் இணையவழி சூதாட்டத்தை தடுக்க சட்டம் முன்மொழியப்பட்டு அது முழுமை பெறாத நிலையில், திமுக அரசு அமைந்த பிறகு ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் இத்தகைய இணையவழி சூதாட்டங்களால் நிகழும் அவலங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. இருந்தபோதிலும் இன்னும் ஆன்லைன் சூதாட்டங்கள் தடைசெய்யப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டங்கள் ஒருபோதும் திறமையை வளர்க்காது; போதைக்கு அடிமையாவதைப் போலவே இந்த விளையாட்டுக்கும் அடிமைப்படுகிறார்கள் என்று அரசு அமைத்த குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்பட்ட இழப்புகளால் மாநிலம் முழுவதும் இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையை அடைக்க திருட்டு உள்ளிட்ட வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வளவு சமூக சீர்கேடுகள் நிறைந்திருக்கும் நிலையில், அரசு சில நடவடிக்கைகளாக, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குப்படுத்துவது குறித்து பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்வதாக அறிவித்து அதுவும் இன்றுவரை நடைமுறைபடுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க தற்போது அமலில் உள்ள சட்டங்கள் கடுமையானதாக இல்லை. சில மாநிலங்கள் இதனை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருக்கின்றன.
hhhhjuy,jloijn ˆ¥/
ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தேசிய அளவில் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டுமென நீதிபதி தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தமிழக முதல்வர் அவர்கள் போதைபொருள் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு அது தொடர்பான குற்றங்களை ஒழிப்பேன் என்று கூறி நடவடிக்கைகளை மேற்கொண்டது போல, ஆன்லைன் போதையான, ரம்மி உள்பட அனைத்து சூதாட்ட விளையாட்டுகளையும் முற்றிலும் தடுக்கும் விதமாக உடனடியாக கடுமையான சட்டம் இயற்றி, வளர் இளம் தலைமுறையினர் மற்றும் சமூகம் சீர்கெடுவதிலிருந்து பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.