ஊடக விவாதங்களில் பாஜக மீண்டும் பங்கேற்க உள்ளனர் என்றும், கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராக நியமித்து உள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பாக ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைப்பர்.
ஆனால், சில நேரங்களில் இந்த வாதங்கள் எல்லை மீறி சென்று ஒருவருக்கொருவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் பேசுவதும் நடக்கும். அப்படியான விவாதங்களின் போது, சில கட்சிகள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்பதற்கு ஊடகங்கள் சரியாக வாய்ப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டு ஊடக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லை என்று கூறி, ஊடக விவாதத்தில் பங்கேற்பதை தமிழக பாஜக நிறுத்தியது. இதனை அப்போதைய மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு. நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழக பாஜக சார்பாக பங்கேற்கும் மாநில நிர்வாகிகளின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி உள்ளிட்ட 30 நிர்வாகிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.