தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்களில், 6 போக்குவரத்து கழகங்களில் உள்ள ஓட்டுநர் – நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்காக இன்று (ஆகஸ்ட் 18) பிற்பகல் 1 மணி முதல் செப்டம்பர்.18-ம் தேதி பிற்பகல் 1மணி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
அதையடுத்து, இன்று அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பித்ததால் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய நிலையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியது. இதனால், பலர் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பித்ததால் அரசு போக்குவரத்துக்கழக இணையதளத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.