தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.