DMK Youth Conference–உரிமைகளை தொலைத்தவர்களே உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம் என திமுக இளைஞரணி மாநாடு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக சார்பில் இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடைபெற்றது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு 2முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சேலம் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
இதற்கு விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் திமுக தலைவர் முக ஸ்டாலின், அமைச்சரும், உதயநிதி ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மாநாட்டு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதாவது திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்த நிலையில்,நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இளைஞரணி மாநாடாம், பிரம்மாண்ட முன்னேற்பாடாம்,
முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம், தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு முந்தைய நாளே மழைக்கான முன்அறிவிப்பு வந்தும்,
மக்களைக் காக்க முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749324389638922627?s=20
இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர், இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே ஏன் என்று கேட்கிறது அதே குரல்.
இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால் ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்.
ஆனால் ஜனநாயகத்தில் ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்.
உரிமை மீட்பு மாநாடாம், காவிரி உரிமையை தொலைத்தது யார், கச்சத்தீவை தாரைவார்த்தது யார், ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்,
கல்வி உரிமையை பறிகொடுத்தது யார், நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில், உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்.
வாரிசுகளுக்கே அரியணையா, இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார் (தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.