நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன்(Tamilisai Soundararajan) ராஜினாமா செய்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளான மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தொடக்கத்தில் மருத்துவர்கள் அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளார்.
பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2007 முதல் 2010வரை பாஜக மாநில பொதுச்செயலாளராகவும், 2010 முதல் 2013வரை மாநில துணைத் தலைவராகவும் பணி செய்துள்ளார். இதன் பின்னர் ஓராண்டாக தேசிய செயலாளராக இருந்தவரை, தமிழக் பாஜகவின் முதல் பெண் மாநிலத் தலைவராக பாஜக மேலிடம் நியமித்தது. இதன்படி கடந்த ஆகஸ்ட் 2014 முதல் செப்டம்பர் 2019வரை 5 ஆண்டுகள் தமிழக பாஜகவின் மாநில தலைவராக அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.

அவரது உயரம் குறித்து உருவகேலிக்கு உட்பட்டாலும் அதையெல்லாம்தூக்கி வீசிவிட்டு அதிரடி அரசியலில் ஈடுபட்டதோடு, பா.ஜ.க மேலிடம் எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் பற்றில் ஊறிப் போயிருந்த நாடார் இன மக்களிடம் பா.ஜகவையும் கொண்டு போய் சேர்த்தார்.20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இயங்கிவரும் தமிழிசை சௌந்தரராஜன் பா.ஜ.க சார்பில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் 5,343 வாக்குகளுடன் 5வது இடத்தையும், 2011 தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு 7,040 வாக்குகளுடன் 4வது இடமும் பிடித்துள்ளார். இதே போல் 2009ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், வடசென்னை தொகுதியில் போட்டியிட்டவர் 23, 350 வாக்குகளுடன் 3வது இடத்தையும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டவர் கனிமொழியிடம் தோற்று 2வது இடத்தையும் பிடித்தார்.
இதையும் படிங்க: Breaking-ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் தமிழிசை
பா.ஜ.க தமிழக தலைவராக இருந்து தோல்வியை சந்தித்ததால், புதிய தலைமையை நியமித்த பா.ஜக மேலிடம், தமிழிசை சௌந்தரராஜனின் Tamilisai Soundararajan உழைப்புக்கு பரிசாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து அழகு பார்த்தது. தனக்கிடப்பட்ட ஆளுநர் பணியை அர்ப்பணிப்போடு செய்ததோடு, பா.ஜ.க மேலிடத்துக்கு விசுவாசமாக நடந்துகொண்டவருக்கு 2021 பிப்ரவரியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியும் கூடியது.

5 ஆண்டுகளாக தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் 3 ஆண்டாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என இரட்டைக் குதிரை சவாரி செய்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்பியிருப்பது பரபரப்பாகி உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதாக குடியரசுத் தலைவர் மர்முவுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பா.ஜ.க மேலிடம் சொல்லித்தான் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழிசையின் ஆஸ்தான வாஸ்து ஜோதிடரான முன்னாள் ஊடகவியலாளர் ரவி ரமணாதான் தமிழிசை தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், அதனால்தான் தேர்தல் களம் காண்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழிசை தேர்தலில் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ள நிலையில் அவர் தமிழகத்தில் இன்னின்ன தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் ஆரூடங்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
தமிழகத்தில் தமிழிசைTamilisai Soundararajan ஏற்கனவே போட்டியிட்ட தூத்துக்குடியோடு சேர்த்து தென்சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர் என 4 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவர் போட்டியிடலாம் என்றும், இல்லை இல்லை அவர் புதுச்சேரியிலேயே போட்டியிடப் போவதாகவும் அரசியல் அரங்கில் அலை அடிக்கிறது.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக அவரது சகோதரியான தமிழிசை களம் இறக்கப்படலாம் என்கிறார்கள். இதனிடையே புதுச்சேரியில் பா.ஜக ஆதரவான என்.ஆர்.காங்கிரஸின் ஆட்சி நடப்பதாலும், புதுச்சேரி ஆளுநராக தமிழிசை மீது எந்த விமர்சனமும் மக்களிடையே இல்லை என்பதும் அவர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ வெற்றிவாய்ப்பு இருப்பதாலும், அதனால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பும் இருப்பதாலும்தான் ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.