10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
2022-23 கல்வியாண்டிற்கான 10 வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 19 தேதி வெளியானது. இதில் 91.39 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 23,971 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதனையடுத்து தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், மே 27 ஆம் தேதிவரை 10ஆம் வகுப்பு துணைதேர்வு எழுத மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்திருந்தது.
அதன்படி 10ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நடைபெற உள்ளதாக, துணைத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
பாலிடெக்னிக், ஐடிஐ, மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.