பழனியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் உலகத் தமிழர் முத்தமிழ் முருகர் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து வரும் முருக பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரியில் இந்த பணிகளை ஆய்வு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வருகை தந்தார்.
மேலும் காலையில் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்குச் சென்ற அவர், கால பூஜையின் போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோவிலில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும், பிற பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பழனி ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.