இந்திய சீனியர் ஆண்கள் அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகி உள்ள கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி சக்திவேல் – சங்கரேஸ்வரி தம்பதியரின் மகன் மாரீஸ்வரன். 9ம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் சேர்ந்து படித்து வந்த மாரீஸ்வரன் அப்பகுதியில் ஹாக்கி விளையாட்டு வீரர்களைப் பார்த்து அவர்களைப் போல் வர வேண்டும் என கடுமையாக முயற்சி செய்துள்ளார்.
தமிழ்நாடு அணியில் 5 முறை இடம் பெற்ற அவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் இந்திய கணக்கு தணிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது தொடர் முயற்சி, கடின உழைப்பு காரணமாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
அதே போல் இந்திய வீரரான கார்த்திக்கும் பள்ளி மாணவராக இருக்கும் போதே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் சேர்ந்தவர்தான். அரியலூரில் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வசிக்கும் கார்த்திக் குடும்பமும் எளிய பின்னணியைக் கொண்டது. இவரது தந்தை அரசுக் கல்லூரியில் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். குடும்ப சூழல் புரிந்து, கொண்ட கார்த்தி தனது திறமையாலும் விடா முயற்சியாலும் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இந்திய சீனியர் ஆண்கள் அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகியுள்ள இவர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில். வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு, கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன் என தமிழக முதலமைச்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.