தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக மதுக்கடை (tasmac) நடத்திய மாமியார் மருமகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிக்குப் பின்னால் ரகசிய அறை அமைத்து டிமிக்கி கொடுத்த வந்த மாமியார் மருமகள் காவல்துறையிடம் சிக்கியது பற்றிய தொகுப்பைக் காணலாம்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் (tasmac) இரவு பகலாக 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்துவந்துள்ளது.
மதுக்கடை நடத்தி வருவோர், உள்ளூர் போலீசாரை கவனித்து விடுவதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.
இதனையடுத்து, பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மனின் தனிப்படைக்கு, பெண்ணாகரம் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் மாமியார் மருமகள் சேர்ந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று அங்குச் சோதனை செய்த போது மதுப்பாட்டில் ஏதும் சிக்கவில்லை.
இருப்பினும், காவல்துறையினரின் நீண்ட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் வரவேற்பறையில் அழகுற அமைக்கப்பட்டிருந்த ஷோகேஸையொட்டி அமைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியைத் தள்ளிப்பார்த்த போது உள்ளே ஒரு ரகசிய அறை இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, அந்த அறை முழுவதும் அட்டைப்பெட்டிகளிலும், மூட்டையாகவும் மதுப்பாட்டில்கள் ஏராளமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மாமியாரும், மருமகளும் ரகசிய அறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த அறையிலிருந்து 600க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் மாமியார் லட்சுமி, மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தீபாவளி பண்டிகையொட்டி மதுபாட்டில்களை பதுக்கிவைத்து இருமடங்கு விலையில் விற்பனை செய்வதற்காக வீட்டில் வைத்திருந்தாக கூறினர்.
மேலும், தலைமறைவான மகேஸ்வரியின் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.