‘கழகங்கள் இல்லாத தமிழ்நாடு ‘ என்ற கோஷத்தை பாஜக தமிழகத்தில் முன்வைத்து வரும் நிலையில், திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலை” என முன்னாள் எம்.எல்.ஏ-வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்;
”இன்று முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் V.P சிங் அவர்களின் 92வது பிறந்தநாளில் சேலத்தில் சந்திக்கிறோம். அவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் 27% சதவீத இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்த மண்டல் கமிஷனை அமல்படுத்தியவர்.
இதனால் உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அவர் இறந்த பிறகும், இப்போதும் கூட கோபத்தில் அவரது வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள். தமிழக மக்களிடம் அவருக்கு மரியாதை இருக்கிறது.
அவரது பணிகளை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரால் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என மஜக வின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அப்பல்கலைக்கழகம் என்பது டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாஜக-வினரால் உலக அளவில் இந்தியாவுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மக்களை பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள விரும்புகிறது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியலை செய்கிறது. மக்களை பிளவுபடுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க துடிக்கிறது.
பாஜக பிரமுகர் நுபுர் சர்மா நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய நிலையில், அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை பாராட்டியிருக்கிறார். அதை அவர் மறுக்கவில்லை.
நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும். அவரால் உலக அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகமெங்கும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மஜக சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஒவ்வொருவரையும் விமர்சித்து தன்னை பெரிய தலைவர் போல பாஜக பிரமுகர் அண்ணாமலை காட்டிக் கொள்கிறாரே? என ஒரு செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தமிமுன் அன்சாரி, அதிரடியாக அறிக்கை விடுவதாலேயே ஒருவர் பெரிய தலைவராகி விட முடியாது. மக்கள் செல்வாக்கு தான் முக்கியம். பிறரை விமர்சித்து, தன்னை வளர்த்துக் கொள்ளும் அரசியல் தவறானது என்று பதிலளித்தார்.
அதிமுகவில் நிலவும் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டபோது, அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றவர், ‘கழகங்கள் இல்லாத தமிழ்நாடு ‘ என்ற முழக்கத்தை பாஜக தமிழகத்தில் முன்வைத்து வரும் நிலையில், திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலை” என்றும் பதிலளித்தார்.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு, வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறாரே ? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அவரை மதிக்கிறோம், ஆனால் அவரை முன்னிறுத்துபவர்கள் யார்? என்பது முக்கியமானது. ஜனநாயக கட்டமைப்புகளை சீரழிக்கும் பாஜக அவரை முன்னிறுத்துகிறது. எனவே எதிர்கட்சிகள் நிறுத்தும் ஜனநாயக சிந்தனைமிக்க பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.
இந்நிகழ்வில்,மாநிலத் துணைச் செயலாளர் பாபு ஷாகின்சா, மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் சாதிக் பாட்சா, AJS தாஜுதீன், மாவட்ட அமைப்புகுழு உறுப்பினர்கள் அஸ்லம் கான், சனாவுல்லா கான், அக்மல் ஹுசேன், அப்ரார் பாஷா, ஜான், ஜபிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.