காவிரி மேலாண்மை ஆணையம் நீர் பங்கீட்டு விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் (duraimurugan) குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாகத் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “புதுதில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது.
காவிரி படுகையின் தண்ணீர் தேவைக்கு இது போதாது என்பது ஒருபுறமிருக்க, இந்த அளவு குறைவான நீரைக் கூட தமிழகத்திற்கு தர முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டது.மேலும் குறுவை சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற விநாடிக்கு 24000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்குத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற வரையறை இல்லை. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுகிறது. இதனையும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக எடுத்து வைக்கும்” என தெரிவித்துள்ளார்.