ஒன்றரை வருடம் ஒரே வீட்டில் தங்கி குடும்பம் நடத்திய காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை சிங்கப்பூரில் இருந்தபடியே தடுத்து நிறுத்திய டிக்டாக் பிரபலத்தின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் புத்தூரணி பிரபு. சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரபு, அங்கு தடை செய்யப்படாத டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு பொழுதைக் கழித்துள்ளார். டிக் டாக் மூலம் சிங்கப்பூர்வாழ் இந்தியப் பெண் சியாமளா என்பவருடன் இவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாகி உள்ளது.
இருவரும் சிங்கிளாகவும், மிங்கிளாகவும் இணைந்து பல டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய சியாமளாவிடம், தனது தாயிடம் அனுமதி பெற்று வருவதாக கூறி பிரபு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார்.
இங்கே வந்து சியாமளாவுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார். அதன்படி திங்கட்கிழமை பிரபுவுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் சியாமளாவுக்கு அவரது தோழிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து சிங்கப்பூரில் இருந்தபடியே சியாமளா தமிழக காவல்துறைக்கு புகைப்பட மற்றும் வீடியோ ஆதரங்களுடன் பரபரப்பு புகார் ஒன்றை ஆன் லைனில் பதிவு செய்தார்.
அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய வீட்டிலேயே ஒன்றரை வருடங்களாக தங்கி இருந்த பிரபு, தேவகோட்டைக்கு சென்று தனது தாயாருக்கு ஒரு கடை அமைத்து கொடுத்து விட்டு ஆசீர்வாதம் வாங்கி வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இந்த புகார் மீது விசாரணை செய்த தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன், புது மாப்பிள்ளை பிரபுவை அழைத்துச் சென்று விசாரித்தார்.
சிங்கப்பூரில் சியாமளாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அதனை மறைத்து தன்னிடம் பழகியதாகவும், டிக்டாக்கில் இளமையாக தெரிந்ததால் நம்பி ஏமாந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறி உள்ளார் பிரபு.
அதனால் தான் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாகவும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை மறுமணம் செய்ய தனது வீட்டில் உள்ளவர்கள் சம்மதம் தெரிவிக்காததால் தான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாரானதாக பிரபு தெரிவித்தார்.
இதையடுத்து சிங்கப்பூர் சியமளாவுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து தக்க ஆதாரங்களை சேகரித்து பிரபுவை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே திருமண வீட்டில் இருந்தவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு சியாமளா அனுப்பி வைத்த டிக்டாக் வீடியோக்கள் பகிரப்பட்டதால், ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் நெருங்கிப் பழகியவருடன் தனக்கு திருமணம் வேண்டாம் என்று மணமகள் எழுந்து சென்றுவிடார்.
இதனால் பிரபுவின் திருமணம் பஞ்சரான டவுன் பஸ் போல நடுவில் நின்றது மாப்பிள்ளை வீட்டாருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.