சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல்குளத்தில் நேற்று (26-7-2023) மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன். சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.