‘செக்கிழுத்த செம்மல்’ கப்பலோட்டிய தமிழன்.. சுதந்திரப் போராட்ட வீரர்.. வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினமான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ”
என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்!
தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
“ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த தென்னிந்திய புரட்சியாளர், நாட்டில் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி இந்தியர்களை தலைநிமிர செய்த தேசிய பற்றாளர், நம் தாய் நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாளர்களின் உரிமைக்காகவும் போராடி சிறைச் சென்ற செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் தியாகி வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்..
“சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்ததோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய ”கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று.
வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்” என பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..
“சுதந்திரப் போராட்டத்தில், நாட்டுக்காக தனது உடமைகள் அனைத்தையும் தியாகம் செய்து, சுதேசி வேள்வி ஊட்டிய கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று.
சிறந்த வழக்கறிஞராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தவர். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தேச விடுதலைக்காக, கடுமையான சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர். மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர்.
சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் என ஆங்கிலேய நீதிபதியே தீர்ப்பில் குறிப்பிடும் அளவுக்கு தேச விடுதலைக்காகப் போராடிய ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் தன்னலமற்ற தியாக வரலாறை போற்றி வணங்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..
“இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 87-ஆம் நினைவு நாள் இன்று. தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காக போராடிய ஈடு இணையற்ற தலைவர் அவர். ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்.
வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி அவர்கள். நமக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக அவர் செய்த தியாகங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அவரது வீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் போற்றுவோம், நினைவு கூர்வோம்! என்று தெரிவித்துள்ளார்.