மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் உயிரை மாய்த்த நிலையில், தண்ணீர் தொட்டிக்குள் விளையாடிய குழந்தைகளையும் பாம்பு கடிதத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் கணேசன் – நாகலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். நாகலட்சுமி 100 நாள் வேலைதிட்ட பொறுப்பாளராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், நாகலெட்சுமியின் கணவர் கணேசன், தனது 5 மகள்களுக்காக, கோயம்புத்தூர் வேலையை விட்டுவிட்டு, தனது சொந்த ஊரிலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று மாலை, 4 வயது மகள் சண்முகப் பிரியாவும், 9 வயது மகள் விஜயதர்ஷினியும், வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்து தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் இருந்த நாகப்பாம்பு சிறுமிகளை கடித்துள்ளது.
இந்நிலையில், அங்கு வந்த பார்த்த குடும்பத்தினர் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கிய நிலையில் இருந்த சிறுமிகளை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இரண்டு சிறுமிகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 வயது சிறுமியான சண்முகப் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், 9 வயது சிறுமி விஜயதர்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் 50 நாட்களில், பாம்பு கடித்து 4 வயது மகளும் இறந்திருப்பது, அந்த குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.