டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் உரத்தக் குரல் எழுப்பிவரும் இச்சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும் .
கூலி வேலைக்கு செல்வோர் உட்பட கடின வேலை செய்பவர்களுக்காக காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது என்பது நியாயமா?
ஏற்கனவே, தமிழ்நாட்டில் மது போதையினால் வேலைத்திறன் வெகுவாக குறைந்து வருவதை அரசு உணர்ந்துள்ளதா?
ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்துவிட்டு, அதற்கு மாறாக நாள் முழுவதும் மதுக்கடைகளை திறக்க முயல்வது ஏற்புடையதல்ல.
ஆகவே, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதும், மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மதுவிற்கு அடிமையானோரைக் கண்டறிந்து மறுவாழ்வு முகாம்களில் சிகிச்சை அளித்து அவர்களை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாக இருக்கும்.
அதை விடுத்து, மதுவை 90 ML பாக்கெட்களில் விற்றாலோ மற்றும் வேலைக்கு மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களைத் திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.