பெரியார், அண்ணா என்றாலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கசப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்(velmurugan) விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) காலை சரியாக 10 மணியளவில் கூடியது. அவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்துள்ள மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றவுள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆளுநர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சொந்த விறுப்பு வெறுப்புகளால் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பதாகக் குற்றஞ்சாட்டிய முதலமைச்சர்,
ஆளுநரின் செயல்பாடுகள், சட்டத்திற்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக உள்ளதாக தெரிவித்தார். கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆளுநர் நிறுத்தி வைத்துள்ள 10 மசோதாக்களையும் முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து,சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “சட்டத்திற்கு உடனடியாக கையெழுத்திடத்தான் ஆளுநர் பொறுப்பு. ஆனால், அவற்றை செய்ய அவர் தவறும்போது, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் இன்று சட்டப்பேரவை கூடியுள்ளது.
மீண்டும் அனுப்பவுள்ள சட்ட முன்வடிவை, நியாயமான முறையில் முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்.
ஆளுநர் பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே அவரது நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன” என்றார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டங்களை குப்பையில் போடுவதுபோல தூக்கி வீசிவிட்டு அமைதி காக்கிறார் ஆளுநர்.
பெரியார், அண்ணா என்றாலே கசக்கும் ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. 10 சட்ட மசோதாக்களையும் வரவேற்கிறேன்” என்று கூறி உரையை முடித்தார்.