மத்திய அரசு பணியிடங்களில் 95சதவீதம் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்(L.Murugan) தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்திய இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
குறிப்பாக நாடு முழுவதும் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.12,000 கோடியில் ஸ்கில் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரோஸ்கர் மேளா என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், குடிமக்களின் நலனை உறுதி செய்யவும் 10லட்சம் பேருக்கு வேலை வழங்க முயற்சி செய்து வருகிறது.
மேலும், இதன் ஒரு பகுதியாக இன்று 7 வது பணி நியமன ஆணை வழங்கும் விழா நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 70ஆயிரம் நபர்களுக்கான பணி ஆணை வழங்கபட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார்.
பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
ரோஜ்கார் மேளா மூலம் மத்திய அரசு பணியிடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார் .அதன்படி தற்போதைய நிலவரப்படி 6மாதங்களில் 6 லட்சம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ளவர்களுக்கு பணி விரைவில் வழங்கப்படும். சொன்னதை செய்பவர் பிரதமர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். மத்திய அரசு பணியிடங்களில் 95 சதவீதம் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.