காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு இன்று அரங்கேறியிருக்கிறது, அடுத்த பொதுக்குழு அறிவிப்பு செல்லாது எனவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவிருப்பதாகவும், துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு ஒற்றைத் தலைமை என்ற ஒரே தீர்மானம் வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் அறிவித்ததால் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ்-க்கு எதிராகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக இந்த பொதுக்குழுவிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவிற்கு வருகை தந்தார்.
அவருக்கு ஆதரவாக ஈபிஎஸ் வாழ்க.. எடப்பாடியார் வாழ்க.. என அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பின. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தில் தனது தொண்டர்கள் சூழ வருகை தந்தார். அவருக்கு பெரிதாக தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது என கூறிவிட்டு ஓபிஎஸ்-உடன் மண்டபத்திற்கு வெளியே நடையை கட்டினார் வைத்திலிங்கம்.
இதன் பிறகு தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;
பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்தால் பொதுக்குழுவே ரத்தானது போல் தான். அப்போது எப்படி அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என கேள்வியெழுப்பி பேசிய வைத்தியலிங்கம்,ஜனநாயக முறைப்படி பொதுக்குழு நடக்கவில்லை. காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்தேறியிருக்கிறது; பதவி வெறி,அவசர புத்தியில் நடந்தேறியிருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இப்படி ஒரு பொதுக்குழு நடந்ததில்லை;
இந்த பொதுக்குழு கூட்டம் அரைமணி நேரத்தில் முடிந்த ஓரங்க நாடகம் என ஆவேசமாக கூறினார்.