கொடிவேரி அணை அருகே சாயத் தொழிற்சாலை அமைந்தால் கொங்கு மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணை, கொங்கு மண்டலத்தை வளம் செழிக்கச் செய்யும் மிக முக்கியமான அணையாகும். 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த அணை, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. அதுமட்டுமின்றி இந்த அணை அருகே 12 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுகின்றன.
சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்த அணைக்கு மிக அருகே, 35 ஏக்கரில், ரூ.100 கோடியில் சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சாயத் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வந்தால், அதிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகள் கொடிவேரி அணையிலும், பவானி ஆற்றிலும் கலக்கும்.
இதனால் கொடிவேரி அணையில் இருந்து பாசனம் பெறும் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசனங்களும், கூட்டுக்குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கோபிச்செட்டிப்பாளையம், நம்பியூர், பவானி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளுக்கு பவானி ஆற்றிலிருந்து செல்லும் குடிநீரும் மாசடையும். இதனால் கோபிசெட்டிபாளையம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கொந்தளிப்பில் உள்ளனர்.
கொடிவேரி அணை அருகே சாயத் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ‘கொடிவேரி பாசன சபை’ உள்ளிட்ட பாசன சங்கங்களும், விவசாயிகளும் பொதுமக்களும், போராட்டங்களை நடத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் மாசு என்பது இன்று மிகப்பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் வகையில், கொடிவேரி அணை அருகே சாயத் தொழிற்சாலை அமைப்பது கொங்கு மண்டலத்தின் இயற்கை வளத்தை சிதைத்து விடும்.
எனவே, கொடிவேரி அணை அருகே சாயத் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதி அளிக்க கூடாது. தற்போது நடந்து வரும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். வருங்காலங்களில் பாசனம், குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு தொழிற்சாலையையும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது. தொழில் வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியதும் மிக முக்கியம். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.