அதிமுக-விற்கு ஒற்றைத் தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் குறித்து விவாதிப்பதற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,
‘அ.தி.மு.கவிற்கு ஒற்றைத் தலைமையை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்தோம். இன்று கருத்து பறிமாற்றம் மட்டும்தான் நடைபெற்றது. கட்சிதான் இறுதி முடிவெடுக்கும். அது எப்போது என்பது சஸ்பென்ஸ். பெரும்பாலானவர்கள் ஒற்றைத்தலைமை தேவை என வலியுறுத்தியுள்ளனர். யார் தலைமையில் ஒற்றைத் தலைமை என குறிப்பிட்டு விவாதிக்கப்படவில்லை. அது யார் என்பது இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி முடிவு செய்யும். இன்றைய கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை.
கழக நிர்வாகிகள், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஒற்றை தலைமைத்தான் தேவை என ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கும் கட்சிக்கு எந்த சம்மந்தமும் இல்லை. சசிகலா குறித்து எதற்காக கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். அவர் குறித்து பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இருபெரும் தலைவர்களின் நல்லாட்சியில் அ.தி.மு.க வலுவாக உள்ளது. வெற்றி, தோல்வி என்பது நாணயத்தின் இரு பக்கம். மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும்’ என்று தெரிவித்தார்.