77 வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’விருது வழங்கி கௌரவித்தது குறித்து கி.வீரமணியின் உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை,பாராட்டு சான்றிதழ் ,தகைசால் தமிழர் விருதினை கி. வீரமணிக்கு வழங்கினார்.
இது குறித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில்,
தமிழ்நாடு அரசு சார்பில் நேற்றுகொண்டாடப்பட்ட விடுதலை நாள் விழாவில் ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் இவ்வாண்டுக்குரிய ‘தகைசால் தமிழர்’ விருதினை எனக்கு அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்.
எனது உளப்பூர்வமான, தலைதாழ்ந்த வணக்கத்தையும், நன்றிகளையும் – தமிழ்நாடு அரசுக்கும், அதன் ஆற்றல் -ஆளுமை மிகு முதலமைச்சருக்கும் உரித்தாக்குகிறேன்.நேற்றும், முன்பும் ஊடக நண்பர்கள், விருது தொடர்பாக எனது உணர்வுபற்றி கேள்வி கேட்டபோது சொன்ன பதிலில்
‘இவ்விருது என்பது எனக்கு – என் பெயருக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது தந்தை பெரியாருக்கும், அவர்தம் லட்சியப் பயணத்தில் களம் கண்ட – காணும் எண்ணற்ற தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே நான் கருதி, எனது லட்சியப் பயணத்தை மேலும் உறுதியுடனும், உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும், இந்த நம்பிக்கையை நியாயப்படுத்திடும் உழைப்பை, நாணயத்துடன் என்னால் முடியும் வரை செய்வேன்’’ என்று கூறினேன்.
‘அனைவருக்கும் அனைத்தும்‘ கிட்டும் சமத்துவ, சம வாய்ப்புச் சமூகத்தினை உருவாக்கும் பணியிலும் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.