அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தாமல், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக் எனப்படும் காகிதக் குடுவையில் மது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தாமல், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதும், அவற்றைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வேதனை அளிக்கிறது.
அத்துடன் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மது விற்பனையை அரசு படுஜோராக நடத்தி வருகிறது. பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர்.
மதுவினால் பலரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தாமல், எலைட் டாஸ்மாக் கடைகள், தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை என மது விற்பனையை தமிழக அரசு விரிவுபடுத்தி வருகிறது. மேலும் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக் எனப்படும் காகிதக் குடுவையில் மது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஒருபுறம் போதை இல்லா இல்லா தமிழகம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் டெட்ரா மது விற்பனையை ஊக்கப்படுத்தி மக்களை குழப்பாமல், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.