திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் பக்தர்கள் நாள் கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால், திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு காம்பளக்சில் உள்ள 32 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
இதையும் படிங்க: சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை..!!
அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். இதனால், நேற்று முதல் இன்று காலை வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.