ஆடி மாதம் பிறக்கும் முதல் நாளை ஆடிப்பிறப்பு என கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் உள்ள அனைத்து நாட்களும் தனி சிறப்பு உடையது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு. மேலும் ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி திங்கட்கிழமை பிறந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை இருக்கும்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது. ஜூலை – 17ஆம் தேதி முதல் அமாவாசை வருகிறது. அதேபோன்று, தமிழ் மாதத்தில் ஆடி 31 ஆம் தேதி (ஆகஸ்ட் -16) அன்று இரண்டாவது அமாவாசை வருகிறது.
ஆடிமாத சிறப்பு வாய்ந்த நாட்கள்:
ஆடி மாதத்தில், ஆடி பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி தபசு, ஆடி பூரம் என ஆடி மாதம் முழுவதும் திருவிழா, விரதம் என அனைத்து நாட்களும் சிறப்பானது.
ஆடி மாத பூஜை முறை :
ஆடி முதல் நாளன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, கோலமிட வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நிலை வாசலில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்ட வேண்டும்.
அம்மனை வீட்டிற்கு வரவேற்கும் விதமான சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் புது வஸ்திரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் கயிறு, வளையல் போன்ற மங்கள பொருட்களை வைத்து, ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.