கடந்த 2 நாட்களாக ஒட்டுமொத்த இந்தியாவும் கடந்து போன பேர்ல ஒரு பொதுவான பேர் சர்பராஸ் கான் (Sarfaraz Khan)…
ரஞ்சி ட்ராபி வரலாற்றுலேயே நடக்காத அநீதி, பல சாதனை படைச்ச சர்பராஸ் கானுக்கு நடந்தது தான் அவருடைய பேர ஒட்டுமொத்த இந்தியாவும் முணுமுணுக்க ஒரே காரணம்.
அதாவது என்ன நடந்தது அப்படீன்னா, ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர்,
2000 ரன்களுக்கு மேல் அடித்து அதிக சராசரி (82.23) வைத்திருந்த வீரர்களில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரர்,
ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சராசரி (154) வைத்திருந்த 2வது வீரர், ஜோ ரூட்டுக்கு பிறகு முதல்தர கிரிக்கெட்டில் 6 முறை 150 ரன்கள் அடித்த வீரர் என,
சாதனைகளுக்கு மேல் சாதனைகளாக குவிச்சு வச்சிருந்தவாறு தான் இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான்.
இத்தனை சாதனைகளை பண்ணியிருந்தாலும் அவருக்கு இந்திய அணில வாய்ப்பு மறுக்கப்பட்டுகிட்டே வந்தது. மூன்று சீசனா ரஞ்சிக்கோப்பையின் நம்பர் 1 வீரராக ஜொலித்த போதும் இந்திய அணியில் இடம் கிடைக்காததால்,
இரவெல்லாம் அழுததாக பொதுவெளியில் வெளிப்படுத்தினார் சர்ஃபராஸ் கான். வாய்ப்பு மறுக்கப்பட்டதுக்கு சர்ஃபராஸ் கானின் நடத்தையையும், உடல் பருமனையும் காரணம் காட்டி குற்றஞ்சாட்டியது அப்போதைய தேர்வுக்குழு.
ஆனா, அதுக்கு பின்னாடி உள்ளடி அரசியல் இருக்கலாம்ன்ற கருத்துக்களும் ஒருபக்கம் முன்வைக்கப்படுது. தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்காம மறுத்தாலும்,
சுனில் கவாஸ்கர், டி வில்லியர்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற கிரிக்கெட் வீரர்களின் ஆதரவும், கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவும் அவருக்கு இருந்துச்சு.
இப்படி இருந்த நிலைல தான், கவர்மெண்ட் வேலைக்காக காத்திருந்த வடிவேலுவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கிடைச்ச மாதிரி, சர்பராஸ் கானுக்கு இந்திய அணில இப்போ வாய்ப்பு கிடைச்சு ஆடியிருக்காரு.
அஜித் அகர்கர் தலைமையிலான தற்போதைய தேர்வுக்குழு விராட் கோலி & கேஎல் ராகுல் கிடைக்காததால் சர்பராஸ் கானை (Sarfaraz Khan) அணிக்குள் எடுத்து வந்தது.
தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்காம நீண்டகால காத்திருப்புக்கு அப்புறமா வாய்ப்பு கிடைச்ச மகிழ்ச்சியை சர்பராஸ் கானும் அவரோட தந்தையும் வெளிப்படுத்தின நெகிழ்ச்சியான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள்ள கண்ணீரை வரவச்சிருக்கு.
இதையடுத்து, ஒருபக்கம் தனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்காக கண்ணீர் மல்க சர்பராஸ் கான் நன்றி சொல்ல, மறுபக்கம் தன்னோட மகனுக்கு வாய்ப்பு கொடுத்த BCCI-க்கு நன்றி தெரிவிச்ச சர்பராஸ் கானின் தந்தை நௌஷாத் கான்,
இந்த கால தாமதம் பத்தி சொன்ன தத்துவமிக்க பதில் பலருக்கு நம்பிக்கையூட்டும் வகைல இருக்கு. அதாவது, “இருள் சூழ்ந்த இரவானது கடந்து செல்வதற்கு நேரம் எடுக்கும், நம் விருப்பப்படி சூரியன் ஒருபோதும் உதிக்கப் போவதில்லை.
ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தந்தைக்கும் தன் மகனோ/ மாணவனோ ஒருநாள் நாட்டிற்காக விளையாடுவான் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது.
ஆனால் அவன் தொப்பியைப் பெற்றால் மட்டுமே அதனை உலகம் நம்புகிறது. அது எப்போதும் கனவாகவே போய்விடும் என்று நான் நினைக்கவில்லை.
அதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும் என்று எனக்குத் தெரியும். என் வாழ்வில் பலரைப் பார்த்துள்ளேன், அவர்களில் சிலர் சீக்கிரம் அதைப் பெறுவார்கள்.
சிலர் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்”னு சொல்லியிருக்காரு.
சரி, இத்தனை போராட்டத்துக்கு அப்புறம் கிடைச்ச வாய்ப்புல சர்பராஸ் கான் எப்படி விளையாடியிருக்காரு? அப்படீங்கிறது தான் ஆடுர்த்த கேள்வி! அறிமுக போட்டில, அதுவும் டெஸ்ட் போட்டியில 50 ரன்களுக்கு மேல எடுத்து,
சிறப்பான தொடக்கத்தை நிறுவிய சர்பராஸ் கான் ரன் அவுட் ஆகி வெளியேறியிருக்காரு. சர்பிராஸ் கான் 62 ரன்களில் ஆட்டம் இழந்தவுடன்,
பெவிலியனுக்கு சென்று அழுத சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதையடுத்து, ஜடேஜா சர்பிராஸ் கானிடம் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார்.
மேலும் ரசிகர்கள் பலரும் தம்மை திட்டுவதை உணர்ந்த ஜடேஜா, சமூக வலைத்தளத்திலும் சர்பிராஸ் கான் ரன் அவுட் ஆனது தமது கவனக்குறைவில் தான்.
சர்பிராஸ் நன்றாக விளையாடினார் என்று பாராட்டி பதிவு ஒன்றை போட்டிருகாரு.
இதுக்கும் முன்னாடி இந்திய அணில அறிமுக டெஸ்ட் போட்டியில் 13 இந்திய வீரர்கள் ரன் அவுட் ஆகி உள்ளனர். அவர்களில் இரண்டு வீரர்கள் மட்டுமே 50 ரன்களை கடந்து ஆடிய போது ரன் அவுட் ஆகி இருக்கின்றனர்.
65 வருஷத்துக்கு முன்னாடி அப்பாஸ் அலி 112 ரன் எடுத்திருந்தப்போ றன் அவுட் ஆனார், இப்போ சர்பராஸ் கான் 62 ரங்கள்ல றன் அவுட் ஆகியிருக்காரு.
இது தவிர 11 பேர் 50 ரங்களுக்கு உள்ளேயே அவுட் ஆகியிருக்காங்க. இதில் வேடிக்கையான ஒரு சம்பவமும் நடந்தது.
சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அறிமுகத்துக்கான தொப்பியை வழங்கியது அனில் கும்ப்ளே. அவரும் தன் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆகி இருந்தார்.
அவர் சர்பராஸ் கான் ரன் அவுட் குறித்து பேசுகையில் தனது துரதிர்ஷ்டத்தை சர்பராஸ் கானுக்கும் தான் அளித்து விட்டதாக வேடிக்கையாக குறிப்பிட்டார்.
எது எப்படியோ நீண்ட கால காத்திருப்புக்கு பின் நீதி கிடைச்ச வகைல இந்திய அணில வாய்ப்பு கிடைச்சிருக்க சர்பராஸ் கான் மென்மேலும் நல்லா விளையாண்டு இந்திய அணிக்கு பெருமை சேர்க்க மண்சார்ந்த வாழ்த்துக்கள்…