எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர் துரோகி எடப்பாடியார் என கோஷமிட்டது அதிமுக அலுவலகத்தில் கூடியிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுக்குழு ஒருவழியாக நீதிமன்றத்தில் தடைக் கோரி போடப்பட்ட மனுவையும் தாண்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்குழுவிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவிற்கு வருகை தந்தார். அவருக்கு ஆதரவாக ஈபிஎஸ் வாழ்க.. எடப்பாடியார் வாழ்க.. என அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பின. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தில் தனது தொண்டர்கள் சூழ வருகை தந்தார். அவருக்கு பெரிதாக தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை.
இந்த நிலையில், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு வந்த ஓபிஎஸ்-ன் பிரச்சார வாகனத்தை வெளியே எடுத்துச் செல்லுமாறு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர், ஓபிஎஸ்க்கு எதிராக கோஷமிடுவதாக நினைத்து துரோகி எடப்பாடியார்’ என தவறுதலாக கோஷமிட்டார். பிறகு சுதாரித்துகொண்டு
`துரோகி ஓபிஎஸ்’ என கோஷமிட்டு நகர்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.