வரிசையாக 4 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் 4-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு மூடநம்பிக்கையில் ‘போதும் பெண்’ என பெயர் வைக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பட்டம் பெற்று தனது பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளார்.
திருச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான கோவிந்தராஜ்.இவர் தனக்கு 4 பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு ’போதும் பொண்ணு’ என்று பெயர் வைத்துள்ளார். அதற்குப் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ’போதும் பொண்ணு’ என்ற பெயர் வைக்கப்பட்ட அந்தப் பெண், நேற்று சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்று பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பெண் குழந்தைகள் போதும் என்ற அடிப்படையில் தனக்கு மூடநம்பிக்கையாக வைத்த பெயராக இருந்தாலும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று பட்டம் வாங்கி உள்ளேன்’ என்று அந்த மாணவி பேட்டியில் தெரிவித்துள்ளார். அதே கல்லூரியில் முதுநிலை தமிழ் படித்து வரும் காசி வெங்கடேசன் என்பவரை இந்த ’போதும் பொண்ணு’ திருமணம் முடித்துள்ளார். அவரும் நேற்று முதுகலை தமிழில் பட்டம் பெற்றுள்ளார். தம்பதி இருவரும் ஜோடியாக பட்டம் பெற்றது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து போதும் பெண்ணின் கணவர் காசி வெங்கடேசன் கூறுகையில், தன்னுடைய மனைவி மேலும் அதிகம் படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கணித மேதை சர் சிவி ராமன், மூதறிஞர் ராஜாஜி உள்ளிட்ட எண்ணற்ற மாமேதைகள் படித்த இந்த சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெறுவதில் மகிழ்ச்சி கொள்வதாக பட்டம் பெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.