10 நிமிட உணவு டெலிவரி என விளம்பரம் செய்துள்ள சொமேட்டோ நிறுவனத்திடம் போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் எதை எடுத்தாலும் வேகமாகவும், அதிவிரைவாகவும் பெறுவதற்கு மனம் எண்ணும் சூழல் உருவாகியுள்ளது.
மனித இனம் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஒருபுறம் முன்னேறி வந்தாலும் நம் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதில்லை. வீட்டில் ஆரோக்யமான உணவுகளை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என இருந்த காலம் கடந்து வீட்டில் சமைக்கும் பழக்கமே குறைந்து ஹோட்டல்களில் வாய்க்கு ருசியாக உண்ணும் பழக்கம் பெருகி விட்டது.
அதற்கு முக்கிய காரணமாக ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்ய வசதியாக வந்த நிறுவனங்கள் என கூறலாம். புதுவிதமான ஆஃபர்கள் என்கிற பெயரில் சொமேட்டோ நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் ஒருசில நேரங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது வாடிக்கையாளர்களால் பூதாகரமாகியும் இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆர்டர் செய்த உணவின் பாதியை டெலிவரி செய்யும் நபர் சாப்பிட்டுவிட்டு டெலிவரி செய்த நிகழ்வும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் தான், `10 நிமிடத்தில் உணவு டெலிவரி’ என்ற பெயரில் சொமேட்டோ விளம்பரம் செய்துள்ள விவகாரத்தை பலரும் கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளனர்.
சொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 10 நிமிட உணவு டெலிவரி என விளம்பரம் செய்துள்ள சொமேட்டோ நிறுவனத்திடம் போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.