சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். அதன்படி ஜவுளி, நகைக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மாலை 6 வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் காணப்பட்டாலும் கொரோனா தொற்றின் பரவலை கண்காணித்து அதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படியில் சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும், சேலம் செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, பால் மார்க்கெட், நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி ரோடு, லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், மற்றும் வ.உ.சி. மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள். மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இறைச்சி மற்றும் மீன் சந்தைகளை திறந்த வெளியில் தனி கடைகளாக அமைத்து, கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
ஜவுளி மற்றும் நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்ப்டுகிறது
செப்டம்பர் 1-ந் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் கொரானா தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க மேற்கண்ட புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன
மேலும் வார இறுதி நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வார நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி யின் 2 தவணைகள் செலுத்தியதற்கான சான்றிதகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.