இளம் பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞர் மற்றும் உறவினர்கள் போல் நடித்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை நெல்லை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை என்.ஜீ.ஓ பி காலனியை சேர்ந்தவர் கணேசன் என்ற ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலாராணிக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட்பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2020 ஜூலை மாதம் திருமண புரோக்கர் இன்பராஜ் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது பெண்வீட்டார் சார்பில் 40 பவுன் தங்க நகையும் , 3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த சில மாதங்களில் நகையை விற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது மனைவி விஜிலாராணியுடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜிலாராணி தனது தந்தையிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக தந்தை கணேசன் பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வின்சென்ட்பாஸ்கர் ஏற்கனவே பல இளம் பெண்களை ஏமாற்றி 5 முறை திருமணம் ஆனவர் என்றும், அதே போன்று விஜிலா ராணியை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்த நிலையில், வின்செண்ட்பாஸ்கர், உறவினர்களாக நடித்த பிளாரன்ஸ், தாமரைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . மேலும் புரோக்கர் இன்பராஜை போலீசார் தேடிவருகின்றனர்.