‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே வெங்கட்கிருஷ்ணா சாலையில் தி.மு.க.வினரின் அமோக ஆதரவோடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“2016-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதே, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘பூரண மதுவிலக்கு’ நடைமுறைப்படுத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. மதுப்பழக்கத்தினால்தான் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக தி.மு.க.வினரால் மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு முற்றிலும் முரணாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளின்மூலம் பெறப்படும் வருவாய் அதிகரித்துக் கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலையில் மதுவிலக்கு குறித்து செய்தியாளர்களிடையே பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு துளி கூட விருப்பம் கிடையாது என்றும், டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும்;
முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம் என்றும், மது குடிப்பவர்களை படிப்படியாக அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என்றும், அப்புறம்தான் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேட்டி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சமூக மாற்றம் மற்றும் மக்கள் நலனை உறுதி செய்யும் வகையில், பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த தி.மு.க. 40 மாத கால ஆட்சிக்குப் பிறகு, உடனடியாக மதுக்கடைகளை மூட முடியாது என்று கூறுவது மக்கள் நலனில் தி.மு.க.விற்கு உள்ள அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அமைச்சரின் கூற்றுப்படி வைத்துக் கொண்டாலும், ஆண்டிற்கு 500 கடைகள் என்ற அடிப்படையில், கிட்டத்தட்ட 2,000 கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதைக்கூட தி.மு.க. செய்யவில்லை.
12-04-2023 அன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, 500 தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இந்த ஆண்டு மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
ஆனால், எத்தனைக் கடைகள் மூடப்பட்டன? எத்தனை கடைகள் புதிதாக திறக்கப்பட்டன? என்பது குறித்த விவரம் தி.மு.க. அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், பல இடங்களில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே வெங்கட்கிருஷ்ணா சாலையில் தி.மு.க.வினரின் அமோக ஆதரவோடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததே தவிர, புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய மதுக்கடைகளை திறப்பது என்பது தொடர் கதையாக இருந்து கொண்டு வருகிறது. இதன்மூலம் மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே தி.மு.க. அரசு எடுத்து வருகிறது என்பது தெளிவாகிறது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு குறைக்கவும், புதிய கடைகள் திறக்கப்படுவதை தடுக்கவும், இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் அனைத்துக் கடைகளையும் மூடும் வகையில் மதுப்பிரியர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கவும், தமிழ்நாட்டில் இயங்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்து முகவரியுடன் கூடிய புள்ளி விவரங்களை வெளியிடவும் தி.மு.க அரசு முன்வர வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.