Bahujan Samaj Party’s state leader : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும்,
இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? என்று கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பக்க பதிவில்,
“தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை.
மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா?
இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
இதையும் படிங்க : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8 முதல் வெளிநபர்களுக்கு தடை – சத்யபிரத சாஹு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் (Bahujan Samaj Party’s state leader) அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!” என பதிவியுள்ளார்.