நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் கூட்டணி உருவாகும் என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ஒரு மாயையாக கொண்டு செல்கின்றனர். சசிகலாதான் பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றி போயஸ் கார்டன் சென்று அவரை அழைத்தார்கள். தற்போது பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்கிறார்கள் என்று கூறினார்.
மேலும் ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்த கோர்ட் தடை விதித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக கொடியை யார் கட்ட வேண்டும் யார் கட்ட கூடாது என எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? அதிமுக கொடிக்கு இவர்கள் தான் உரிமையாளர்கள் என இணையத்தில் பதிவேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார்.