குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டுமென ஆளுநர் கூறியதாக வந்த செய்தி போலியானது என்றும் பொய்யான செய்தியை பரப்பியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் மாளிகை புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான் என்றும், சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ மற்றும் கிராமக் கோயில் விழாக்களை தடைசெய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பொய்யான செய்தி பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!!
தவறான நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியது என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இது மாநிலத்தில் உயர்பதவியில் இருப்பவரின் மதிப்பை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, பொய்யான செய்தியை பரப்பியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .