தமிழகத்தில் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களை நடிகர் விஜய்(Actor Thalapathy) இன்று நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.
தமிழ் நாட்டில் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய்(actor vijay )சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்தந்த தொகுதிகளை சார்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளது.முன்னதாக ஏற்கெனவே நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்காக பொது வெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஏற்கனவே நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.