நாடு முழுவதும் இன்று அரசு விடுமுறை. இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறை என்பதால் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழாவையொட்டி இன்று அரசு விடுமுறை என்பதால், நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுக்கும்பட்சத்தில், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வந்துவிடுகிறது.
இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதனால் பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த சூழலில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி,
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம்-ரூ.4,301 ஆகும். ஆனால் நேற்றும், இன்றும் கட்டணம் ரூ.10 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063. நேற்றும், இன்றும் கட்டணம் ரூ.11 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,382 ஆக இருந்த கட்டணம் ரூ.7,192 ஆகவும்,
சென்னை- கோவைக்கு ரூ.3,369 ஆக இருந்தது, ரூ.5,349 ஆகவும்,
சென்னை- சேலத்துக்கு ரூ.2,715 ஆக இருந்த கட்டணம் ரூ.8,277 ஆகவும் அசுர வேகத்தில் உயர்ந்து உள்ளன.
எப்படி கட்டங்களை உயர்த்தினாலும், கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, விமானங்களில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.