என்னதான் அதிமுக கொடி, சின்னம், கட்சி வேட்டி போன்றவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தாலும், “வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி” என்று கூறி, எடப்பாடி தரப்பினரை மிரள விட்டு வருகிறார் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். தற்போது கட்சியே கையில் இருந்தாலும், “புலி வருது கதையாக, அது உண்மையாகி விடுமோ?” என்ற பதைபதைப்பில் இருக்கிறது எடப்பாடி தரப்பு அதிமுக வட்டாரம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிரிந்த அதிமுக, சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ஆம் ஆண்டு வாக்கில் ஓ.பி.எஸ். – இபிஎஸ் என பெயர் மாறியது. அன்று முதல், அதிமுகவிற்கு உரிமை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அன்றைய காலகட்டத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் இடையே சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தன.
ஒரு வழியாக பிரதமர் மோடி தலையிட்டதன் பேரில், ஓ.பி.எஸ். – இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து ஆட்சி நடத்த துவங்கினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு பொறுப்பு வகித்து வந்தனர் ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து ஓ.பி.எஸ்., இபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கவே அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை குறித்த விவாதங்களும் கட்சியின் ஒரு சில தலைவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அதை கடுமையாக எதிர்த்து வந்தது ஓ.பி.எஸ். தரப்பு.
புகழேந்தி தொடுத்த வழக்கு:
இந்நிலையில் தான், அதிமுக கட்சிக்கும், சின்னத்திற்கும் இருவருமே உரிமை கோரினர். தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என இருவரும் மாறி மாறி மனு செய்து வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்த புகழேந்தியும் கட்சியின் சின்னம் குறித்து முடிவெடுக்கக் கோரி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
புகழேந்தியின் கோரிக்கை மனு குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காத நிலையில், அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார் புகழேந்தி. அந்த வழக்கு விசாரணையில், “இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, தேர்தல் ஆணையம் விரைந்து நடைவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, “அதிமுக தற்போது எனது தலைமையில் ஒரே அணியாகத்தான் உள்ளது. தொண்டர்களின் பெரும்பான்மையும் எங்களுக்கே அதிகம் உள்ளது. எனவே, யாருக்கு பெரும்பான்மை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருக்கிறதோ அவர்களுக்கே கட்சியும் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுவது வழக்கம். ஏற்கனவே, அது போன்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கி உள்ளது” என வாதிட்டது.
கடந்த சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலான அந்த வழக்கில், வாதங்கள், எதிர் வாதங்கள் ஆகியவை முடிவடைந்த நிலையில்தான், “இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்” என அறிவித்திருந்தார் நீதிபதி சச்சின் தத்தா.
சூரியமூர்த்தியின் வழக்கு:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினரான சூரியமூர்த்தி என்பவரும் இதே போன்ற ஒரு வழக்கை, ஆனால், “பிரச்சனை தீரும் வரை இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது” என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
“வழக்கு முடியும் வரை சின்னம் தராதீங்க”
அவரது அந்த மனுவில், அதிமுகவின் இரு தலைவர்களுக்கு இடையே உண்டான உட்கட்சி பிரச்சனை மற்றும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு ஆகியவை தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்துக்கு பல முறை புகார் அளித்துள்ளேன்.
அதில், “உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு அதன் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்பதை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லை. தற்போது, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், “அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கோரியிருந்தார்.
திண்டுக்கல் சூரியமூர்த்தியின் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் அவ்வழக்கின் விசாரணையையும் மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
“இரட்டை இலையில்தான் போட்டி” – ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்., இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து இருந்த போது அதிமுக, பாஜக, ஆகியவை ஒரே கூட்டணியாக இருந்து கடந்த 2021 சட்டசபை தேர்தலை எதிர் கொண்டன. தற்போது சட்டப் போராட்டங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ்.சுக்கு பாதகமாகவும், எடப்பாடி பழனிச்சமிக்கு சாதகமாகவும் சென்று விட்ட நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவால் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன் பிறகு, பாஜக – அதிமுக கூட்டணி உடைந்த நிலையில், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அந்த இரு கட்சிக்ளுமே தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக இருந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வார் என நம்பப்படும் நிலையில், “வரவிருக்கும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என்று கடந்த சில வாரங்களாகவே அழுத்தம் திருத்தமாக இகூறி வருகிறார் ஓ.பி.எஸ்.
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.!
எலக்சன் ஃபீவர்
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியானது இன்று மாலை 3 மணியளவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதே 3 மணியளவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் என்பதால், ஓ.பி.எஸ்., இபிஎஸ் அணிகள் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரிடமும் எப்போதையும் விட பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்து தேர்தல் ஃபீவரை இப்போதே உருவாக்கி விட்டது.