அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 17, 18 மற்றும் 26, 28 ஆகிய 4 நாட்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2023, 18.10.2023, 26.10.2023, 28.10.2023 ஆகிய நான்கு நாட்கள் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில், கழகத்தின் 52-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்து கொள்கிறேன்