பிரபல மலையாள நடிகை அம்பிகா ராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
கடந்த 2002-ம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் வெளியான ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக அம்பிகா ராவ் திரையுலகில் நுழைந்தார். மலையாள நடிகையான அம்பிகா ராவ், ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 2019-ல் வெளியான, இந்த படத்தில் அம்பிகா ராவ், பேபி மற்றும் சிமியின் தாயாக நடித்திருந்தார்.
கடந்த 10 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் அவர், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்யம்’ மற்றும் ‘தொம்மனும் மக்களும்’ மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘வெள்ளினக்ஷத்திரம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், திலீப் நடித்த பிளாக்பஸ்டர் ‘மீஷா மாதவன்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, சமீபத்தில் வெளியான ‘அனுராகா காரிக்கின் வெல்லம்’, ‘தமாஷா’ மற்றும் ‘வெல்லம்’ உள்ளிட்ட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 58.
அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த அம்பிகா ராவுக்கு ராகுல், சோஹன் என்ற மகன்கள் உள்ளனர்.