வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை கிராமத்தில் நெடுஞ்சாலை துறையின் மூலம் சித்தூர் திருத்தணி சாலையில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர் காந்தி அவர்களும் அடிக்கல் நாட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெகத்ரட்சகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.பி.நந்தகுமார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பெகுமாரவேல் பாண்டியன் இ ஆப., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திரு பாபு, காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் திரு வேல்முருகன், மாநகர துணை மேயர் திரு. சுனில்குமார் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய துரைமுருகன், ‘‘எங்கள் ஆட்சியில் யார் யாருக்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ, அதைச் செய்கின்றோம். ஹை-ஸ்கூலில் படிச்சிக்கிட்டிருக்கிற பெண், காலேஜ் போனால் அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். செலவுக்கு அவர் பெற்றோரிடம் கேட்கத் தேவையில்லை. பெண் பிள்ளைகளின் அம்மாக்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம்.
அதற்காகத்தான் சில்லரை மாத்திக்கிட்டு இருக்கிறோம். கவலைப்படாதீங்க. சொன்னபடி கொடுத்துவிடுவோம். அம்மாவுக்கு ஆயிரம்; பொண்ணுக்கும் ஆயிரம்; இப்படி ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்கிற ஒரே ஆட்சி எங்க ஆட்சிதான்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், ‘‘அணை விவகாரத்தில் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் நீங்கள் இரட்டை வேடம் போடுவதாக ஓ.பன்னீர்செல்வம் பேசிவருகிறாரே?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘நானாவது இரட்டை வேடம் போடுகிறேன் என்கிறார். அவரோ பல வேடங்களைப் போடுபவர். பாவம் அவர். கலங்கிப்போய் ஏதேதோ பினாத்திக் கொண்டிருக்கிறார். ‘அணைக் கட்டக்கூடாது’ என்று ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறோம்.
ஆந்திர அரசு ஏதாவது முயற்சி செய்தால், நாங்கள் கேஸை விரைவுப்படுத்துவோம்’’ என்றவரிடம், ‘‘தி.மு.க பயங்கரவாத அமைப்புகளுக்கு துணைப் போவதாக மத்திய இணை அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?’’ என்ற கேள்விக்கு, ‘‘யாரோ விவரம் தெரியாத மந்திரி அவர். நாங்கள் எந்தக் காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைப் போனதில்லை. எங்கள் கொள்கையும் அதுவல்ல’’ என்றார்.
இதனை தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்காக நல்ல திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் சேயோயல் ஆற்ற உள்ளதாகவும் இது விடியா ஆட்சி என்று சொன்னவர்களுக்கு ஆட்சிமுடியும் நேரத்தில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.