Treat water crisisசமீபத்தில் கர்நாடகாவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியதையடுத்து தற்போது கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவையும் விட்டு வைக்கவில்லை தண்ணீர் பிரச்சனை. பார்க்கும் இடமெல்லாம் பசுமை, அவைகளுக்கு நடுவே ஆறு என ரம்மியமாக காட்சி அளிக்கும் கேரளாவையே எல்.நினோ கால நிலை மாற்றம் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ‘தமிழகத்தின் தட்பவெப்ப நிலையோ போகப்போக கடுமையாக மாறுமோ?’ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்த சூழலில்தான், ‘தமிழகத்தை காக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அரசை வலியுறுத்தி உள்ளார் சமூக ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது இணைய பக்கத்தில் எழுதியுள்ள அவர், “சென்ற வருடத்தில் மழைப்பொழிவு குறைவு மற்றும் இந்த கோடையின் கடும் வெயில் இரண்டும் சேர்ந்து கேரளாவில் தற்போது கடும் வறட்சி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15க்குள் மழை இல்லையெனில்,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.நீர்தேக்கங்களில் நீர் இல்லை. நிலத்தடி நீரும் குறைந்து காணப்படுகிறது.
2023ல் மழைப்பொழிவு கேரளாவில் 24% குறைவாகப் பெய்துள்ளது. 70% மழைப்பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவ மழை, 34% சென்ற வருடம் குறைவாக பெய்துள்ளது. கோடைக்காலமும் கேரளாவில் முன்கூட்டியே தொடங்கி, பிப்ரவரி மாதத்திலேயே பகல் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், இந்த கோடைக் காலத்தில் வறட்சி தாண்டவமாடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
2018 வெள்ள பாதிப்பிற்குப்பின் கேரளாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாகவே இருந்து வருகிறது. வெள்ளத்தின் போது ஏற்பட்ட ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட மாற்றமே நிலத்தடிநீர் நிலத்திற்குள் செல்வதில் மாறுதல் ஏற்பட்டு அது குறைந்துபோக காராணமாக உள்ளது. ஆறுகளால் கொண்டு செல்லப்படும் நீரின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”இறந்தவர்களுக்கு திருமணம்” – கர்நாடகாவில் மிரளவைக்கும் வினோதம்
தற்போதைய எல்நினோ மாற்றம் கேரள வறட்சிக்கு காரணமாக இருந்தாலும்,கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமடைதலின் பாதிப்பு கேரளாவிலும் அதிகமாக காணப்படுகிறது.மழைப்பொழிவிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல நாட்களுக்கு மழை பெய்யாமல் வறண்டும்,சில நாட்களில் அதிகமான மழைப்பொழிவும்,வெப்ப நாட்கள் அதிகரித்தும்,வெப்பம் மிகுந்தும் காணப்படுகிறது.
கேரளாவில் மழைப்பொழிவின் போது நீரைத் தேக்க ஆறுகளின் குறுக்கே 81 அணைகள் இருந்தும்,நீர் தட்டுப்பாட்டை கேரளா சந்தித்து வருகிறது.!கேரளாவில் உள்ள நீர்நிலைகள்,ஈர நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது,தற்போதைய நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.கற்சுரங்கள் அதிகரிப்பு(Quarrying),காடழிப்பு,விதிமீறிய கணக்கற்ற கட்டடங்களின் பெருக்கம்,நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு ….போன்றவை நீர் உள்வாங்கப்படும் அளவு குறைய காரணமாகிறது.
நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், வெள்ள பாதிப்பிற்கு ஆளாகவும்,நிலத்தடி நீர் அதிகம் சேருவது குறையவும் காரணமாக உள்ளது. மழைப்பொழிவு அதிகமிருந்தால் வெள்ள பாதிப்பிற்கும்,மழைப்பொழிவு குறைந்தால், நீரின்றி வறட்சிக்கும் கேரளா ஆளாகிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கேரளஅரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்கவும்,மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை அதிகப்படுத்தவும், சிறு தடுப்பணைகளை அதிகம் ஏற்படுத்தவும்,குளங்களை பாதுகாத்து மேம்படுத்தவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தினால் மட்டுமே,கேரள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.
இதே போல தமிழகத்தின் நிலையும் மோசமாகவே உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பில் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசத்தை (15,213) அடுத்து 7,828 நீர்நிலைகள் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்திய நீர்நிலை ஆக்கிரமிப்பில்,22% தமிழகத்தில் தான் உள்ளது. இது மிக அதிகம்.
பரந்தூர் விமானநிலைய பரப்பில் 26%(2,605 ஏக்கர் நிலங்கள்)ஈரநிலங்கள். இருப்பினும் தமிழக அரசு,அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் இருப்பது எப்படி சரியாகும்?
பரந்தூர் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில்,தமிழக அரசு உள்ளூர் 13 பஞ்சாயத்துகளின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து,திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கேரள பாதிப்பு தமிழகத்திலும் வர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு,மற்ற மாநிலங்களும் உரிய பாடங்களை கற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும்”இவ்வாறு தனது இணையப்பக்கத்தில் அரசுக்கு வலியுறுத்தி உள்ள மருத்துவர் புகழேந்தி கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சி விகிதம் குறித்து எழுதியிருந்த ஆய்வுக்கட்டுரை பலராலும் பாராட்டப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.