ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
கடும் புயலும், கடல் சீற்றங்களும் உயிரினங்களின் வாழ்விடத்தை அழிக்கும் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால்… இறைவன் உறைவிடத்தை உலகிற்கு அறிய வைத்திருக்கிற அதிசயம் நடந்திருக்கிறது.
ஆதிதிராவிடர்களும் அர்ச்சகராகலாம் என்று, அரசு சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தலாம். ஆனால்… பட்டியல் இனத்தவர்கள் உள்பட எல்லா ஜாதியினரையும் கருவறைக்கு வரவழைத்து, அவர்களை கொண்டே அபிஷேகம் செய்ய வைத்திருக்கிறான் இத்தலத்து ஈசன்.
யாரைத் தீண்டத்தகாதவன் என்று இந்த சமூகம் தள்ளி வைத்திருக்கிறதோ…. அவர்களில் ஒருவரை தனக்கு, தினமும் அமுது படைக்க வைத்திருக்கும் சமத்துவமும் இங்கு நடைபெற்று வருகிறது.
ஆம்…நேயர்களே… ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற, இந்திய நாட்டின் இறையாண்மையை பறை சாற்றும்படியான அற்புத ஆலயம், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் ஸ்ரீ வேதவள்ளி அம்பாள் சமேத.. ஸ்ரீ மேலமறைக்காடர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
முதலில் கோயில் அமைந்த புராண வரலாற்றை தெரிந்துகொள்வோம்.
“இறைவன் திருவுளத்தை இலக்கணமாய் வகுத்து, மெய்ஞான உலகிற்கு வழிகாட்டிகளாய்த் திகழ்ந்த ரிக், யஜுர்,சாம, அதர்வண எனும் நான்கு வேதங்கள், கலி காலம் ஆரம்பமாகும் போது, தங்களுக்கு அபகீர்த்தி வந்துவிடுமோ என்றெண்ணி, கயிலாயம் சென்று சிவபெருமானிடம் அடைக்கலம் ஆகிவிட பூலோகத்தில் இருந்து புறப்பட்டார்கள்.
அப்போது, இந்த மறைஞாயநல்லூரில் யாகவேள்விகளில் ஈடுபட்டிருந்த ஞானிகளும், ரிஷிகளும், வேதங்களை தடுத்து, “இன்னும் கொஞ்சகாலம் எங்களுடனே இருங்கள்” என்று வேண்டிக் கொண்டனர்.
“சிவன் – பார்வதி தரிசனத்தைக காணச் செல்லும் எங்களை தடுப்பது நியாயமா ?” என்று வேதங்கள் கேட்டபோது, அவர்களுக்கு காட்சி தந்த ஈசனும் ,அம்பாளும், “இங்கேயே இருந்து அறம் வளர துணை புரியுங்கள். உங்களை தர்பைகளும், விருட்சங்களும் அக்னியாக மாறி பாதுகாக்கும்” என்று அருளாசி தந்தனர்.
அதன்படி வேதாரண்யத்தில் பிரசித்திபெற்ற வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு வேதங்கள் கோயில் கொண்டு அருள்பாலித்தன. அதில் மேற்கு திசையில் உள்ள திருத்தலம்தான் இந்த மேலமறைக்காடர் கோயில். இங்கு சாம வேதம் வீற்றிருப்பதாக ஐதிகம். வடக்கு மறைக்காடர் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கிழக்கு மற்றும் தெற்கு மறைக்காடர் கோயில்கள் கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கின்றன.
‘வேதங்கள்’ என்றழைக்கப்படும் ‘மறைகள்” நியாயம் கேட்ட நல்ல ஊர் என்பதால் ,இது ‘மறைஞாயநல்லூர்’ என்று பெயர் பெற்றது” என்கிறது புராண வரலாறு.புராதனமான இக்கோயில் முட்புதர்க் காட்டுக்குள் மறைந்து போய்விட்டது.
மீண்டும் புணரமைக்கப்பட்ட, தற்போதுள்ள கோயிலில் நுழைந்த உடனேயே நந்தீஸ்வரர் தனி மண்டபத்தில் அழகுற அமர்ந்திருக்கிறார். இடது புறத்தில் சூரியனும்,வலது புறத்தில் சந்திரனும், பிரகாரத்தில் சமயக் குரவர்கள் நால்வருடன் சேக்கிழார் இணைந்து காட்சியளிக்கிறார்.
விநாயகர், மகாலட்சுமி, துர்க்கை, காலபைரவர், நடராஜர் ஆகியோர் தனித்தனியே அம்சமாய் வீற்றிருக்க, மூலவரான ஸ்ரீ மறைக்காடர் கிழக்கு நோக்கியும், அம்பாள் வேதநாயகி தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும்,
அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் அகத்தியர் தன் மனைவி லோகமுத்ராவுடன் தங்கியிருந்து பூஜை செய்து பதிகம் பாடியருளிதோடு, தன் மனைவியுடன் வீற்றிருந்து அருளாசி தருவது தனி சிறப்பாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சுனாமி எனும் ஆழிப் பேரலையால் தமிழகக் கடலோர மாவட்டங்கள் தத்தளித்தன. குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. லட்சக்கணக்கான மரங்கள் மடிந்தன. அப்பகுதியே நிலைக் குலைந்துபோன சமயத்தில் தான், இத்தலத்து திருமறைக்காடர், தன்னை மூடியிருந்த முட்புதர்க் காடுகளிலிருந்து எழுந்தருளியிருக்கிறார்.
இந்த ஊரில் சுவாமி காட்டிலிருந்து மீண்டு, உலக வெளிச்சத்திற்கு வந்ததே, ஒரு சிலிர்ப்பான கதைதான்.
ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மர வியாபாரியான கோவிந்தராசு, தன் நண்பர்களுடன் ” நாம் சிறு வயது முதல் பார்க்கிற இந்த காட்டுக்குள் என்னதான் இருக்கிறது ?” என்று சிறு பாதை அமைத்த போது, பாழடைந்த மண்டபம் ஒன்று தெரிந்திருக்கிறது. அதில் ‘பேய், பிசாசு, அல்லது கொடிய விலங்குகள் இருக்குமோ’ என்று பயந்தவர்கள், ஊரார் மற்றும் , சங்கு ஊதும் மந்திரவாதி துணையுடன் காடுகளை அழித்தனர். அப்போது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்திருக்கிறது.
ஆம். லிங்கத் திருமேனியாக, ஸ்ரீ மறைக்காடர் காட்சி தந்திருக்கிறார். அடுத்த கணமே, திடீரென பலத்த காற்று வீச, மழை பொழிய அஞ்சி நடுங்கி இருக்கிறார்கள். சில மணி நேரத்தில் அப்பகுதி முழுவதையும் சுனாமி கபளீகரம் செய்து கொண்டிருந்தது. அதை கண்ட மற்றவர்கள் ‘மறைந்திருந்த சுவாமியை வெளிக்கொண்டு வந்ததால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்துவிட்டது’ என்று அடிக்கவே வந்து விட்டார்களாம். சில நாட்கள் கழித்து சிறிய கொட்டகை அமைத்து அதில் ஸ்ரீ மறைக்காடரை வைத்து வழிபாடு செய்ய, தற்போது பிரமிப்பான கோயிலாக உருவெடுத்திருக்கிறது. அதன் அருகிலேயே வராஹி அம்மனுக்கும் தனி கோயில் அமைத்திருக்கிறார்கள்.
அன்று முதல் இன்று வரை கோவிந்தராசு இக்கோயிலை விட்டு விலகாமல், தினமும் சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியம் முதல் அன்னதானம் வரை அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறார்.
இதுபற்றி கோவிந்தராசு பேசுவதை கேட்போம்.
“இத்தலத்தில் பூஜை போட்ட பின்புதான் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் பெரிய கோயிலையே எழுப்பினார்கள்” என்று வேதாரண்யம் மகாமாத்யம் என்ற நூலில் குறிப்பு உள்ளது. ராவணனை வதம் செய்த இராமருக்கு வீரஹத்தி தோஷம் பிடித்திருந்தது. அவர் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள வீரஹத்தி விநாயகரை வணங்கவே, தோஷம் நீங்கியதாகவும், அந்த தோஷத்தை நீக்கும் சக்தியை விநாயகருக்கு கொடுத்ததே இந்த மறைக்காடர்தான் என்றும், கங்கை நதி தனது பாவங்களை போக்க தினமும் உச்சிக்காலத்தில் வேதாரண்யம் மணிக்கர்ணிகை தீர்த்தத்தின் நீராடி, அதன்பின் இத்தலத்தில் வருணத் தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்து வருவதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
ஓங்கார சித்தர் கடந்த 600 ஆண்டு காலமாக இத்தலத்தில் தங்கியிருந்து அர்த்தஜாம பூஜை செய்து வருவதாக செவி வழிச் செய்தியும் உண்டு. இங்குள்ள விநாயகர் சந்நதி முன்பு ஓங்கார சித்தர் உலவுவதாகவும் ,அங்கு விநாயகரை தரிசித்தால் வேண்டுவன கிட்டுவதாகவும், ஒரு உயிரோட்டத்தை உணர முடியும்” என்கிறார்கள்.
இத்தலத்தை வழிபட்டால் தீராத நோய்கள் எதுவானாலும் தீரும் என்று காஞ்சி மடாதிபதி விஜயேந்தரர் ஆசி
கூறியிருக்கிறார். அதனை உறுதிப்படுத்தி, இக்கோயிலில் தொண்டு செய்துவரும்
பக்கிரிசாமியிடம் பேசியபோது..
” 20 ஆண்டுகளுக்கு முன்னால் என் மனைவிக்கு விநோதமான வியாதி ஏற்பட்டது. அதாவது வெளிச்சத்தை பார்க்க முடியாது. சப்தம் கேட்க முடியாது. உடம்பு நடுங்கும். துடியாய் துடிப்பார். என்னால் இயன்ற வரை எல்லாவிதமான வைத்தியமும் பார்த்து சோர்ந்து விட்டேன். வேறு வழியின்றி தொழிலையும் விட்டுவிட்டு, சொந்த ஊரான இங்கு வந்து, மறைக்காடரிடம் மனம் உருக வேண்டினேன்.
“என் மனைவியின் வியாதியைப் போக்கி விட்டால், என் சரீரத்தில் உசுரு இருக்கிற வரை உன்னை விட்டு விலகாமல் உனக்கு ஊழியம் செய்வேன் “என்று வாக்கு கொடுத்தேன். மறைக்காடர் அருளால் என் மனைவி எட்டு ஆண்டுகளுக்கு முன் பரிபூரணமாய் குணம் ஆகிவிட்டார். இந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் இந்த மறைக்காடர்தான்.
எனவே அவரிடம் வாக்கு கொடுத்தபடி இந்த ஆலயத்தில் ஊழியம் செய்து வருகிறேன். என் அனுபவத்தில், இதயம், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு உள்பட தீராத வியாதிக்காரர்கள் பலர் இக்கோயிலில் வழிபட்டு நலம் பெற்று இருக்கிறார்கள் ” என்றார்.
என்ன நேயர்களே …சாதி இனம், மதம் மொழி கடந்து,மனித வாழ்வுக்குத் தேவையான வளங்கள் அனைத்தையும் வழங்கிவரும் ஸ்ரீ மறைக்காடரை நேரில் தரிசிக்க தயாராகிவிட்டீர்களா….
மீண்டும் ஓர் மகத்தான தலத்தில் சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !