ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் கூடியிருந்த பசுமாடுகள் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி நான்கு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் – ஆற்காடு பரபரபான தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் திரிவது வாடிக்கையான ஒன்று. இது குறித்து மாவட்ட, நகராட்சி நிர்வாகத்தினர், அவ்வப்பொழுது சிறு சிறு நடவடிக்கைகள் மட்டுமே எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. குறிப்பாக வாகன ஓட்டிகளை மாடுகள் அச்சுறுத்துவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
மேலும் அவ்வப்பொழுது ஏற்படும் சாலை விபத்துகளில் மாடுகள் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் அருகே சாலையில் கூடி இருந்த பசுமாடுகள் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில் 4 மாடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
அப்போது உயிரிழந்த நான்கு பசு மாடுகளில் ஒரு பசு மாட்டின் கன்று இறந்து போன தன் தாய் பசுவை சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்து அம்மா அம்மா என்று அழைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.