வழக்கறிஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் 2023 இல் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சில மாதங்களுக்குமுன் வந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.
அப்போது வழக்குரைஞர்கள் அலுவலகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்‘’ என்று மிக அருமையான, முற்போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.அதில்,
1967 இல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் (இந்துத் திருமணச் சட்டத் திருத்தம் 7A என்ற புதிய பிரிவு இணைப்புமூலம்) என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, அதற்குப் பின்னோக்கிய கால அதிகாரத்தையும் (with retrospective effect) அளித்து தந்தை பெரியார் மகிழ, அவருக்கே காணிக்கையாக்கி, அறிஞர் அண்ணாவின் தி.மு.க. அரசு செய்து புதிய வரலாறு படைத்தது.
இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமை, புரட்சி, பொதுக்கூட்ட மேடைகளில்கூட எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது – சிக்கனமும், எளிமையும் கலந்த முறையில். இப்போது 70 ஆண்டுகளில் என்னே வெற்றியின் விரிவு – வெளிச்சம் என்று தெரிவித்தார்.
மேலும் திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன்னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்‘’ என்ற மிக முற்போக்கான தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையாக அரசமைப்புச் சட்ட 21 ஆவது பிரிவின்படி சிறப்பான தீர்ப்புத் தந்துள்ளனர்.
‘‘வயது வந்த இருவர், சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்குக் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது, கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது, அரசமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்‘’ என்று இந்த நீதிபதிகள் பழைமையின் – சனாதனத்தின் மண்டையில் ஓங்கி நீதியைத் தட்டி தட்டித் தந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.